Wednesday, May 8, 2013

குட்கா, பான்பராக், பான்மசாலா போதை பாக்குகளுக்கு தமிழக அரசு விதித்த தடையை வரவேற்கிறோம்!



குட்கா, பான்பராக், பான்மசாலா போதை பாக்குகளுக்கு
தமிழக அரசு விதித்த தடையை வரவேற்கிறோம்!
 

தமிழக இளைஞர் முன்னணி அறிக்கை

பான்பராக், மாணிக் சந்த், ஹான்ஸ் உள்ளிட்டவைகளை தடை செய்ய வலியுறுத்தி, தமிழக இளைஞர் முன்னணி தொடர்ந்து போராடி வந்தது. இப்போதைப் பாக்குகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் புற்று நோய், வயிற்றுப் புண், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல நோய்கள் உண்டாகின்றன. பெண்களுக்கு கருச்சிதைவு மற்றும் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.

பொது மக்கள் மத்தியில் விரிவான விழிப்புணர்வு பரப்புரை இயக்கத்தை தமிழக இளைஞர் முன்னணி நடத்தியது. விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தி வணிகர்கள் மத்தியில் பரப்புரை இயக்கமும், போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இவ்வகைப் பாக்குகளை தடை செய்யாமல் விலையை சற்று உயர்த்திய நேரத்தில், அதைத் தடை செய்ய வலியுறுத்தி சென்னை கோட்டை முன் தமிழக இளைஞர் முன்னணி மறியல் போராட்டம் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இப்போதைப் பாக்குகளை உற்பத்தி செய்யும், வடநாட்டைச் சேர்ந்த கோத்தாரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடத்தப்பட்டு தமிழக இளைஞர் முன்னணி தோழர்கள் கைதாகினர்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உணவு கலப்பட தடுப்புச் சட்டத்தின் கீழ் இவ்வகை போதைப் பாக்குகள் தடை செய்யப்பட்டன. இதனை எதிர்த்து குட்கா தயாரிக்கும் வடநாட்டு நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.

இந்நிலையில், கடந்த ஆண்டு இந்திய அரசு, புகையிலை சார்ந்த பொருட்களை உணவு கலப்பட தடுப்புச் சட்டத்தின் கீழ் அறிவித்தது. இதன் மூலம் பான்பராக், மாணிக் சந்த், ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பாக்குகளின் விற்பனையை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.

இதனைப் பயன்படுத்தி, மத்தியப் பிரதேசம், கேரளா, பீகார் மாநிலங்கள் குட்கா வகை பாக்குகளின் விற்பனைக்குத் தடை விதித்தன. இதனைச்சுட்டிக் காட்டி, கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பரில்  குடந்தையில் நடைபெற்ற தமிழக இளைஞர் முன்னணி ஆறாவது தமிழக மாநாட்டில், இளைஞர்களின் ஆளுமைத் திறனை சீரழித்து அவர்களை போதை அடிமைகளாக வைத்திருக்கும், பான் பராக், மாணிக்சந்த், ஹான்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை போதைப் பொருட்களையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டுமெனக் கோரினோம்.

இந்நிலையில், பான்பராக், மாணிக் சந்த், பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை தயாரிக்கவும், விற்கவும், சேமிக்கவும் தமிழக அரசு தடை விதிக்கிறது என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார். தமிழக அரசின், இத்தடையை தமிழக இளைஞர் முன்னணி வரவேற்கிறது!

இதே போன்று, இளைய தலைமுறையினரை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் மதுவையும் தமிழக அரசு தடை செய்து, டாஸ்மாக் மதுபானக்கடைகளை இழுத்து மூடவேண்டுமென்றும் கோருகிறோம்! 

இங்ஙனம்,
கோ.மாரிமுத்து, தலைவர், தமிழக இளைஞர் முன்னணி.
க.அருணபாரதி, பொதுச் செயலாளர், தமிழக இளைஞர் முன்னணி. 

இடம்: சென்னை -17. 
நாள்: 08.05.2013