Wednesday, August 28, 2013

டாஸ்மாக் கடையை இழுத்துப் பூட்டும் போராட்டம் தமிழக இளைஞர் முன்னணி தோழர்கள் விடுதலை!


டாஸ்மாக் கடையை இழுத்துப் பூட்டும் போராட்டம்
தமிழக இளைஞர் முன்னணி தோழர்கள் விடுதலை!



தமிழக இளைஞர்களை போதையில் ஆழ்த்தி, ஆளுமையை சீரழித்து தமிழினத்தின் எதிர்காலத்தையே சீரழித்து வரும் அரசு மதுபானக் கடைகளான டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்து மூடக் கோரி தமிழக இளைஞர் முன்னணி சார்பில் 2013 சனவரி 4 அன்று  தமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடைபெற்றது.

சென்னை, தஞ்சை, ஓசூர், கிள்ளுக்கோட்டை, குடந்தை, கிருட்டிணகிரி, செங்கிப்பட்டி, சிதம்பரம், பெண்ணாடம் உள்ளிட்டப் பகுதிகளில் கடுமையான காவல்துறை கெடுபிடிகளுக்கிடையே நடைபெற்ற இப்போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான த.இ.மு. தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம், பெண்ணாடம் (முருகன்குடி) ஆகிய பகுதிகளில் போராடியத் தோழர்கள் மீது காவல்துறை கண்மண் தெரியாத தடியடி நடத்தி கைது செய்தனர்.

சிதம்பரம் கஞ்சித்தொட்டி பகுதியில் தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர்  ஆ.குபேரன் தலைமையில் டாஸ்மாக் சாராயக்கடையை இழுத்து பூட்டும் போராட்டம் நடத்திய 4 பெண்கள் உள்ளிட்ட 19 பேரை காவல்துறை, தடியடி நடத்திக் கைது செய்தது.

தோழர்கள் மீது 143, 188, 353 ஆகிய பிரிவுகளின் கீழ் பொய்வழக்குகள் பதிந்த காவல்துறையினர்,  04.01.2013 அன்று கடலூர் நடுவண் சிறையில் அடைத்தனர். 09.01.2013 அன்று நிபந்தனைப் பிணையில் விடுதலையானத் தோழர்கள் 15 நாட்கள் காவல் நிலையத்தில் கையொப்பமிட்டனர்.

இது குறித்த வழக்கு சிதம்பரம் குற்றவியல் நடுவர் எண் 2ஆம்  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. த.இ.மு சார்பில் வழக்கினை வழக்கறிஞர் திரு விஜய்ரஞ்சித் நடத்தினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்து, இன்று (26.08.2013) தீர்ப்பளித்த நீதிபதி, தோழர்கள் ஆ.குபேரன், வே.சுப்ரமணியசிவா, கி.சதீசுகுமார், ப.கா.கார்த்திக், சு.சுகன்ராஜ், செ.மணிமாறன், ஞா.விக்னேசுவரன், ரா.கலைக்கோவன், பா.கலைவாணன்,  ந.ராசேந்திரன், இரா.எல்லாளன்(எ)ராசேசுகுமார், ரங்கநாதன், சி.அருண்பிரகாஷ், சோ.கார்த்திகேயன், மு.முருகவேள், ஆ.யவனராணி, இரா,பவித்ரா, வே.சிவஞானஜோதி, இரா,ஐஸ்வர்யா ஆகிய அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டு விடுதலை செய்யப்பட்ட தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்! டாஸ்மாக் மதுபானக் கடைகளை இழுத்து மூடும் வரை போராட்டங்களை முன்னெடுப்போம்!