Friday, August 22, 2014

கேரளாவை பின்பற்றி தமிழகத்திலும் படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும்! தமிழக இளைஞர் முன்னணி கோரிக்கை!


கேரளாவை பின்பற்றி தமிழகத்திலும் படிப்படியாக
மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும்!
தமிழக இளைஞர் முன்னணி கோரிக்கை!

கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கு செயல்படுத்தப்படும் என்றும், அதற்கு முதல் கட்டமாக 730 மதுக்கடைகள் மூடப்படும் என்றும் பத்தாண்டுகளில் முழுமையான மதுவிலக்கு செயல்படுத்தப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மக்கள் தொகை விகிதப்படி, இந்தியாவிலேயே அதிகளவில் மது அருந்துபவர்கள் உள்ள மாநிலம் எனப் பெயர்பட்ட, கேரளா அரசின் எடுக்கப்பட்ட இம்முடிவு, வரவேற்கத்தக்கது; பின்பற்றத்தக்கது.

தமிழ்நாட்டில், தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகள், தமிழக இளையோரை சீரழிந்த பாதைக்குக் கொண்டு சென்றுள்ளது. பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்குச் செல்லும் இளையோர், உடலுழைப்புத் தொழிலாளர்கள் என கணிசமான அளவிலான இளைஞர்களை மது அடிமைகளாக டாஸ்மாக் கடைகள் மாற்றியுள்ளன. மது அருந்த பணம் கேட்டு கொலை, கொள்ளையில் ஈடுபடுதல், மது அருந்திவிட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்தல் என மதுவினால் ஏற்படும் சட்டம் ஒழுங்குச் சிக்கல்களும், பெரும் சவாலாக உள்ளன.

மது அருந்தியதால் வாழ்க்கையை இழந்த இளைஞர்களும், குடும்பங்களும் தனிமரமாக நிற்கும் சூழலில், தமிழகத்தின் பல பகுதிகளில், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக் கோரி அந்தந்த பகுதிகளில் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 2013ஆம் ஆண்டு சனவரி 4ஆம் நாள், தமிழகமெங்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப்பூட்டும் போராட்டத்தில், தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் ஈடுபட்டு, கைதாகி சிறை சென்றனர்.

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடிவிட்டால், தமிழக அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்றும், தமிழக அரசின் ‘இலவச’த் திட்டங்கள் இதன் காரணமாக பாதிக்கப்படும் என்றும் காரணம் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த வருமான இழப்பை சரிகட்ட பல வழிகள் உள்ளன.

2012ஆம் ஆண்டு, தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு வசூலித்த உற்பத்தி வரி (Central Excise Duty) 9376 கோடி ரூபாய். சுங்க வரி 29875 கோடி ரூபாய். தமிழகத்தில் இருந்து இந்திய அரசு வசூலித்த நிறுவன வருமான வரி, தனி நபர் வருமான வரி, செல்வ வரி ஆகியவை மொத்தம் 34,586 கோடி ரூபாய். தமிழகத்திலிருந்து இந்திய அரசுக்கு கிடைத்த, சேவை வரி 2012ஆம் ஆண்டில் மட்டும் 5594 கோடி ரூபாய். இவ்வாறு, இந்திய அரசு, தமிழகத்திலிருந்து அள்ளிச் சென்ற வரி வருமானம் மட்டும், 79,631 கோடி ரூபாய் ஆகும்.  மது வருமானத்தால் கிடைப்பதாகச் சொல்லப்படும் 20,000 கோடியை விட இது மூன்று மடங்கு அதிகமானத் தொகையாகும்.

இந்த வருமானத்தை, தமிழக அரசு முழுவதுமாகவோ, பகுதியாகவோ கேட்டுப் பெற்றால், டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்து மூடவதால் கிடைக்கும் வரி வருமானத்தை, இழப்பேதும் இல்லாமல் தவிர்க்கலாம். எனவே, தமிழக அரசு இதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். இதைச் செய்யாமல், வரி வருமானத்தைக் காரணம் காட்டி டாஸ்மாக் கடைகளை மேலும் மேலும் திறக்கச் செய்வதும், விழாக்காலங்களில் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கைகளில் இறங்குவதும் சரியான நடவடிக்கையல்ல! கண்களை விற்று ஓவியம் வாங்குவதற்குச் சமமாகும்!


எனவே, தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, கேரளாவைப் பின்பற்றி, தமிழக அரசும், படிப்படியாக மதுவிலக்கைச் செயல்படுத்தி, டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என தமிழக இளைஞர் முன்னணி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இன்னணம்,
  • கோ.மாரிமுத்து, தலைவர், தமிழக இளைஞர் முன்னணி.
  • க.அருணபாரதி, பொதுச் செயலாளர், தமிழக இளைஞர் முன்னணி. 

அறிக்கை வெளியீடு;
===============================
செய்தித் தொடர்பகம்,
தமிழக இளைஞர் முன்னணி
===============================
சென்னை-78
===============================
பேச: 7667077075
===============================